Contact Info

Heal Movement
22C, Scott Nagar, Near Scott Christian College,
Kanniyakumari
Email: siluvaivasthian@gmail.com

Phone: +91-04652-228496
Mobile: +91-9443449943
Home » Press Release

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடக்கம்



உலக இளையோர் தினவிழாவையொட்டி மணக்குடியில் ஹீல் நிறுவனம் சார்பில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

உலக இளைஞர் தினம் ஹீல் தொண்டு நிறுவனம், தமிழ்நாடு சூழியல் இளையோர் கூட்டமைப்பு சார்பில் கீழ மணக்குடியில் நடந்தது. அப்போது சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கீழமணக்குடி பங்கு தந்தை அருட்பணி. சின்னப்பா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரூபட் ஜோதி பங்கேற்றார். மீன்வளத்துறை அலுவலர் சாதிக் நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். ஹீல் நிறுவன இயக்குனர் சிலுவை வஸ்தியன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்து கூறினார். அப்போது வேரறுப்போம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

சீமைக் கருவேல மரங்களும் சீர்கேடு அடையும் சுற்றுச்சூழலும் அவற்றை வேரோடு அழிக்க வேண்டும் என்ற கருத்தை எடுத்துக் கூறினார் சூழியல் விஞ்ஞானி டாக்டர்.சந்தானகுமார். அப்போது அவர் கூறியதாவது, சீமைக் கருவேல மரம் சுற்று சூழல், மண் வளம், நீர்வளம், மனித வளத்திற்கு பெரும் கேடு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாவர வகைதான் இந்த வேலிக்காத்தான் என்கின்ற சீமைக்கருவேல் மரங்கள். முதன்முதலாக இவ்வகைத் தாவர இனம் மகாராஷ்டிராவில் நுழைந்தது. பின்னர் 1950-களில் தமிழ்நாட்டிற்கு வேலிக்காகவும் மற்றும் எரிபொருளாகவும் அறிமுகப் படுத்தப்பட்டது. 

சீமைக்கருவேல் முள் மனிதர்கள், விலங்குகளை குத்துகின்றபோது ஒருவகை விஷ வேதியல் பொருள் கொண்டதால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மரத்தின் பசுமைப் பகுதிகளை விலங்குகள் இரையாகக் கொள்வதில்லை. இம்மரம் எரிபொருள் தவிர வேறு எவ்வகைப் பயன்பாடும் உடையது அன்று. இம்மரங்களின் வேர்கள் நிலத்தின் அடியில் 175 அடி ஆழம் வரை சென்று நிலத்தடி நீரினை உறிஞ்சும் தன்மையுடையது.

நிலத்தடி நீர்மட்டம் ஏற்கனவே மழையின்மையால் குறைந்து வருவதும், இம்மரங்களினால் கூடுதலாகக் குறையவும் காரணமாகிறது. இம்மரங்களின் அருகில் வேறு சிறு செடிகளோ அல்லது மரங்களோ வளர்வதில்லை. இதனால் அதனைச் சார்ந்துள்ள சிறிய விலங்குகளும், பறவைகளும் உணவு மற்றும் வாழிடங்களின் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இம்மரங்களின் அபரிமித வளர்ச்சி ஆங்காங்கே உள்ள உயிரின பன்மய இழப்பிற்கு காரணமாகும். பெரிய மரக்கிளைகள் இன்மை, பழவகைகள் இல்லாமை, முட்கள் உடைய தன்மை ஆணீயவற்றால் பொதுவாக அணில் மற்றும் பறவை இனங்கள் கூட கூடுகள் கட்டி இம்மரங்களில் வாழ்வது கிடையாது.

இம்மரங்கள் அதிகமாக வெப்பம், தண்ணீர் இல்லாதபோதும் உயிர் வாழ்கின்ற தன்மை உடையது. குளங்கள் மற்றும் குளக்கரைகளில் இம்மரங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றது. இதன் இலைகள் குளத்து நீரினில் வீழ்வதும், அழுகிப்போவதும், நீரின் தன்மை கேடுற்று பயனற்றுப் போவதும் நிகழும். அதோடு அங்குள்ள நன்னீர் மீன்வளம் குறைதலும், முட்கள் மீன்பிடித்தலுக்கு சாதகமற்ற சூழ்நிலையினை உருவாக்கி நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும், வேளாண் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் கேடுகளை விளைவிக்கின்றது.

வளர்ந்து வரும் மாநகரப் பெருக்கத்திற்கும், வளர் மனைகளின் வளர்ச்சிக்கும் பொது மற்றும் தனியார் இடங்களில் வளர்ந்து வரும் இம்முள் மரங்கள் அகற்றப்படல் வேண்டும் என்கின்ற தீர்மானங்களும், விழிப்புணர்வும் வளர்ந்து வருகின்றன. இதனை உணர்ந்து அரசும், அரசு சார்பு நிறுவனங்களும், சுற்றுசூழல் மற்றும் வனத்துறை, மாவட்ட ஆட்சியர்கள் இம்மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உச்சநீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து சூழியல் இளையோர் மன்றத்தைச் சேர்ந்தோர் குளங்களில் இறங்கி பாசி மற்றும் புல் பூண்டுகளை அகற்றினார்கள். சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணி புல்டோசர் மூலம் தொடரப்பட்டது. நிகழ்ச்சியில் கீழமணக்குடி பஞ்சாயத்து தலைவர் அலெக்சாண்டர், கோதை கிராம தோ,நயினார், பங்குபேரவையினர், ஹீல் பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.  முன்னதாக இளையோர் சூழியல் மன்ற உறுப்பினர் அனுஷா வரவேற்று பேசினார். நிறைவாக மெர்வின் நன்றி கூறினார். தொடர்ந்து இந்த சீமைக்கருவேல் மரங்களை அகற்றும் பணி ஒரு வாரம் நடைபெறுகிறது.